பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் பழைய துணியை வைத்து சிசேரியன் செய்ததால் உயிரிழந்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளார்.
விருதாச்சலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி பிரியா. கர்ப்பிணியாக இருந்த பிரியா தலைப்பிரசவத்திற்காக கடந்த 27ம் திகதியன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவருக்கு வயிற்று வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசடமைந்துள்ளது. இதனையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக அவருடைய கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். வயிற்றுவலியால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியாவின் வயிற்றில் பழைய துணி இருந்ததாக ராஜ்குமார் கூறியுள்ளார்.