ஈரான் தளபதி அமெரிக்க வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஆதரித்து ஜேர்மன் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஈரானுக்கான ஜேர்மன் தூதரை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ஜேர்மன் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ள முறையற்ற, ஆதாரமற்ற மற்றும் உறவுகளை பாதிக்கக்கூடிய கருத்துக்களை ஈரான் வன்மையாக கண்டிப்பதாக ஈரான் அரசு தெரிவித்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் தவறான, முன் பின் யோசிக்காமல் உறவுகளை பாதிக்கும் விதத்தில், ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சில ஜேர்மன் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் அரசு செய்தி தொடர்பாளரான Ulrike Demmer, சுலைமானியைக் கொன்ற அமெரிக்க தாக்குதல், ஈரான் ராணுவம் எரிச்சலூட்டும் விதத்தில் நடந்து கொண்டதற்கான பதில் நடவடிக்கையாகத்தான் நடத்தப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கள் ஒரு பக்கம் சார்ந்தவை மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகாதவை என்று கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகம், ஜேர்மன் தூதருக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தது.
இதற்கிடையில், ஜேர்மன் உள்துறை அமைச்சரான Heiko Maas, மத்திய கிழக்கு பகுதியில் ஜேர்மன் ராணுவத்தின் பணி தொடரும் என்று குறிப்பிட்டிருந்த அதே நேரத்தில், பதற்றத்தைக் குறைக்கும் வகையில் ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.