ரஞ்சன் ராமநாயக்கவுடன் நான் பேசியதில்லை. உண்மையில் கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம்,
பிரதமரே நீங்களும் ரஞ்சனுடன் பேசினீர்களா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,
“எனது அதிர்ஷ்டம் நான் பேசவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவுடன் நான் பேசியதில்லை. உண்மையில் கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன்.
பிறந்த தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே என்னால் நடந்தது. தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி இறுவெட்டு மூலம் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளது. அதற்கிணங்க நீதிமன்றத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்” என்றார்.