ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது கைசாத்திட்ட எக்ஸா ஒப்பந்தம், இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும், அதன் மூலமாக அமெரிக்கா, தனது யுத்தக் கப்பல்களை இலங்கையில் நிறுத்தும் நிலைமையும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது கைசாத்திட்ட எக்ஸா ஒப்பந்தம், இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அமெரிக்கா, தனது யுத்தக் கப்பல்களை இலங்கையில் நிறுத்தும் நிலைமையும் வரலாம்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே, புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது. எனினும், அது கேள்விக்குறியாகவே உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அது மக்களின் வாழ்க்கை சுதந்திரத்தை பறிப்பதாகவே அமைந்துள்ளது.
வரிகளைக் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் எந்தவொரு பொருளின் விலையும் இதுவரையிலும் குறைவில்லை. பொய்யான வாக்குறுதிகள் ஊடாக, தொடர்ச்சியாக ஆட்சியில் நீடிக்க முடியாது.
அரச நிறுவனங்களில் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பலரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையைக் கருத்தில்கொண்டே, நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின், குரல் பதிவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தவறு செய்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி துணை நிற்காது. அதற்கான எதிர்விளைவுகளை அவர் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.