ஈரானில் நடந்த விமான விபத்து தற்போது உலகம் முழுக்க பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், உக்ரைன், கனடா ஆகிய நாடுகள் இதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்காவுடன் ஏற்பட உள்ள போரை விட ஈரானுக்கு இதுதான் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டபோதும் திடீர் திருப்பமாக ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரானில் உக்ரைன் விமானம் எப்படி விழுந்து நொறுங்கியது குறித்து, பல நாடுகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளது. இது தொடர்பாக முதலில் உக்ரைன் நாடுதான் சந்தேகம் தெரிவித்தது. உக்ரைன் அதிபர் இந்த விபத்து தொடர்பாக மிகவும் கோபமான கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
அந்தவகையில் நேற்று அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி தனது சந்தேகத்தை வெளியிட்டார். இந்த நிலையில்தான் தற்போது இந்த விமான விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதுடன் , விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் இந்த விபத்து குறித்து கனடா அரசும் விசாரணை நடத்தி வருகிறது. கனடாவின் வல்லுனர்கள் குழு இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கி உள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் விமான விபத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்
இன்னொரு பக்கம் ஐநாவில் இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் புகார் அளிக்க உள்ளார். அத்துடன் விமான விபத்து தொடர்பாக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்றும் அவர் ஐநாவில் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒருவேளை ஈரான் தாக்கித்தான் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது என்பது நிரூபனம் ஆனால், ஈரான் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் என்பதுடன் ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை சந்தித்து வரும் ஈரான், இந்த விஷயம் உண்மையானால் இன்னும் பல தடைகளை சந்திக்க நேரிடும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை , அமெரிக்க வீரர்களை தாக்க போய் அப்பாவி மக்களை, ஈரான் கொன்றுவிட்டதாக பரவலாக புகார் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் இந்த குற்றச்சாட்டினை மறுத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.