கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தையும் காண, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள், இன்று, சரம்குத்தியில், தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
சுவாமி அய்யப்பனுக்கு, இந்த திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலையில், மகர விளக்கு பூஜை நடைபெறும். இதைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.மாலை, 6:00 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்படும். மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:ஞாயிறு முதல், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க, கோவிலைச் சுற்றி, 200க்கும் அதிகமான மூத்த போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சன்னிதானம் அருகே, 36 வட்டார காவல் துறை ஆய்வாளர்கள், 15 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், 1,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவைச் சேர்ந்த, 70 பேரும், தொலைதொடர்பு வல்லுனர்கள், 20 பேரும், கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், தேசிய பேரிடர் நிவாரண படை மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக, 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.