ஆசிற் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுக் காணொளி ஒன்றை நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார்.
மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘சப்பாக்’ திரைப்படம் ஆசிற் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த லக்ஷ்மி அகர்வால் என்ற இளம்பெண்ணின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிற் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஃபக்ஸ் ஸ்ரார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் “படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் கடைகளுக்குச் சென்று ஆசிற் கேட்கின்றனர். ஒவ்வொருவருக்கும் மிக எளிதான முறையில் ஆசிற் கிடைக்கிறது.
மொத்தம் 24 ஆசிற் போத்தல்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கடைகளில் எந்தக் கேள்வியுமின்றி ஆசிற் விற்பனை செய்யப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்தியாவில் ஆசிற் வீச்சுக்கள் அதிகளவில் இடம்பெறுவதற்கு விநியோகஸ்தர்களின் பொறுப்பின்மையே காரணம் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி தற்போது வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.