பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும்இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது. எமது பல்கலைக்கழகம் கடந்தகாலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமையை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் உறுதியெடுக்கின்றோம். புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம் என யாழ் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கு தமிழ் நிகழ்வின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெளியிட்ட பிரகடனத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாபெரும் பொங்குதமிழ் நிகழ்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அந்த பிரகடனத்தில், ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாஷைகளையும் நியாயங்களையும் – சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாகவும் – சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தனன்னாட்சி உரிமையையும் வேண்டிநின்ற தமிழ்மக்கள் – தமிழ் தேசியத்தின்பால், தாம்; கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக்கொணர்வதற்கும், வலியுறுத்துவதற்குமாக 2001.01.17 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் – மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே ”பொங்கு தமிழ்” ஆகும்.
இதனைத் தொடர்ந்து – ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும், – புகலிட தேசங்களிலும் பொங்கு தமிழாய் எம் மக்கள் விடுதலைக்காய் பேரெழுச்சி கொண்டனர்.
அப்போது யாழ் மண்ணில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் – அடக்குமுறைகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், வீதிமறிப்புக்களையும், கெடுபிடியான சோதனை நடவடிக்கைகளையும் தாண்டி – குடியிருப்புக்களின் மதில்களினால் பாய்ந்தும், குறுக்கு பாதைகளினாலும் – இளைஞர்கள் முதியவர்கள், மதகுருமார், பெண்கள், மாணவிகள் என்ற பாகுபாடின்றி – சாரைசாரையாக திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் பேரெழுச்சி கொண்டு – பொங்கிப் பிரவாகித்து நின்றது ”பொங்குதமிழ் – 2001”.
சிறிலங்கா அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் – தமிழ்தேசத்தின் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிராகவும் – அவற்றைத் தகர்த்தெறிந்து எழுச்சி கொண்டு தமிழ் மக்கள் – தமது உரிமைக் குரலை உயர்த்தி வெளிப்படுத்திய – எழுச்சிமிக்க பிரகடனமே ”பொங்கு தமிழ்”.
இந்நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் எம்மினம் இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது. இந்நாளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எமது பல்கலைக்கழகம் கடந்தகாலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமையை ஜனநாயக வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் உறுதியெடுக்கின்றோம்.
இப்புனித நாளில் சிறீலங்க அரசினால் கடந்த ஆட்சியில் தாயாரிக்கப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க பின்வரும் தீர்மானங்களை வலியுறுத்துகின்றோம்.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
தமிழ்த் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
மேற்படி கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை இப்பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.