தன்னை விட 26 வயது குறைந்த நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்க மொழி படங்களில் பிரபல நடிகராக இருப்பவர் திபாங்கர் தே. இவர் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதன்பிறகு வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.
திபாங்கர் தேவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கும், 49 வயதான டோலோன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. டோலோனும் வங்க மொழி படங்களில் நடித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு எடுத்தனர்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திபாங்கர் தே-டோலோன் திருமணம் எளிமையாக நடந்தது. சமூக வலைத்தளத்தில் சிலர் வாழ்த்தினர். இன்னும் சிலர் திருமணத்தை விமர்சித்தனர். திருமணம் முடிந்த பிறகு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் தேவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமணம் முடிந்த அடுத்த நாளே திபாங்கர் தே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது வங்க மொழி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.