சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
சமீப நாட்களாக கிளரச்சிப் படைகளிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் சிரிய அரசாங்கம் மற்றும் ரஷ்ய படைகள் தொடர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் சிரியாவின் லட்டாக்கியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், குறித்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் அடையாளம் தெரியாத போராளிகளால் முன்னெடுக்கப்பட்டது என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.