மாமியாரின் கொடுமையால் மருமகள் எடுத்த விபரீத முடிவு..

மாமியார் செய்து வந்த ஆண்குழந்தை கொடுமைக்காக 2 பெண் குழந்தையின் தாயார், சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 7 மாதமேயான ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர் ரன்தீஷா. இவரது கணவரின் பெயர் ஜானி போஸ்லே. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து, அங்கேயே வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 7 மாதமாகும் ஆண் குழந்தையொன்று உள்ளது.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதியன்று இவர்களிடம் சுமார் 20 வயதாகும் பெண்மணியொருவர், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், குழந்தையை சினிமாவில் நடிக்க கொடுத்தால் அதிக பணம் தருவதாகவும் ஆசை வார்த்தையை கூறியுள்ளார். இதனையடுத்து ஜானி தனது தாயார் மற்றும் மனைவியுடன் குழந்தையை பெண்ணுடன் அனுப்பி வைக்கவே, அங்குள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிவித்து அழைத்து செல்வது போன்று, பெண் ஆண் குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.

பின்னர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெண்ணை தேடி வந்த நிலையில், சென்னையில் இருக்கும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் ரேவதி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று மாமியார் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். மாமியாரின் கொடுமையை தாங்க இயலாத ரேவதி, சிகிச்சை மூலமாக ஆண் குழந்தையை பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டு சைதாப்பேட்டைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் சைதாப்பேட்டையில் தங்கிய நேரத்தில் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணிபோல நடித்து வந்ததும், பின்னர் மெரினா கடற்கரைக்கு சென்று நோட்டமிட்டதில் ஜானி – ரன்தீஷா தம்பதியிடம் 7 மாத ஆண் குழந்தை இருந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் குழந்தையை கடத்துவதற்கு திட்டமிட்டு கடந்த 13 ஆம் தேதியன்று திரைப்படத்தில் குழந்தையை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இந்த நேரத்தில் காவல் துறையினரும் பெண்ணின் படத்தை வெளியிட்டு தகவல் அளிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையின்று குழந்தையை பரிசோதிக்க வந்த ரேவதியை கண்டு மருத்துவர்கள் சந்தேகமுற்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் மேற்கோள் தீவிர விசாரணையில், மாமியாரின் கொடுமையால் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ரேவதியின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.