சமீபத்தில் நடிகர் ரஜினி ‘துக்ளக்’ விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.
அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினி மன்னிப்பு கேட்கத் தவறினால் போயஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் சில திராவிட அமைப்புகள் அறிவித்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, திராவிடர் கழகப் பேரணியில் ராமர் – சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தி ஆதாரத்தை வெளியிட்டார். அந்த பத்திரிகை செய்தியின் அடிப்படையில், தான் கேள்விப்பட்ட விஷயங்களையும் வைத்து உண்மையையே பேசியதாகவும், அதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்தார்.
மூட நம்பிக்கைக்கு எதிராக பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணி மீது செருப்பு மாலை வீசப்பட்டதாகவும், அந்த வரலாற்றை நடிகர் ரஜினி திரித்துச் சொல்வதாகவும் திராவிடர் கழகப் பேரணியின் போது களத்தில் இருந்தவர்கள் ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டு வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளித்த ரஜினி, அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை சொல்வதாகவும், தான் தனக்கு தெரிந்ததைச் சொல்வதாகவும் அவர் பதிலளித்தார்.