இந்திய நட்சத்திர வீரர் டோனியின் எதிர்காலம் விராட் கோஹ்லி கையில் தான் உள்ளது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2019 ஐபிஎல் தொடருக்கு பின் முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் சென்ற ரெய்னா, தற்போது எதிர்வரும் 2020 ஐபிஎல் சென்னை அணிக்காக களமிறங்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ரெய்னா, டோனியின் எதிர்காலம் குறித்து கூறியதாவது, ஐபிஎல்-க்கு முன்னால் பயிற்சி பெற டோனி மார்ச் முதல் வாரத்தில் சென்னைக்கு வருவார்.
இப்போது, அவர் தனது குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர் பெரிய பிரச்சினை செய்யாமல் செல்வார்.
அவர் தொடர்ந்து விளையாடுவதை நான் காண விரும்புகிறேன். அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் மற்றும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.
இந்திய அணிக்கு அவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ஆனால், விராட் கோஹ்லியின் முடிவே அதை தீர்மானிக்கும் என கூறினார்.
தனது எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த ரெய்னா, நான் இப்போது எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. ஐ.பி.எல்-ல் என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்தால், நான் எவ்வாறு இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எனவே எனது டி-20 உலகக் கோப்பை நம்பிக்கைகள் ஐபிஎல்-லில் எனது செயல்திறனைப் பொறுத்தது.
எனது முழங்காலை வலிமையாக்கி, ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்றால், எனக்கு இன்னும் 2-3 வருட கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது என்பதை நான் அறிவேன் என கூறியுள்ளார்.