5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்று முதலாவது டி20 போட்டியில் நியூசியை எதிர்த்து விளையாடியது.
ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
விளாசிய தொடக்க ஆட்டக்காரர்கள்:
நியூசி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்தில் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் 7 ஓவர்களுக்கு 73 ரன்கள் எடுத்து ஆபத்தான வகையில் சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் போக்கை சிவம் துபே மாற்றினார்.
மார்டின் குப்தில் 30 ரன்களுக்கு ரோகித் சர்மாவிடம் கேட்சாகி வெளியேறினார். அப்போது நியுசி அணி 8 ஓவர்களுக்கு 81 ரன்களை எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கனே வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ரன்களை எடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் அவரின் பங்குக்கு 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து மிரட்டினார். இறுதி கட்ட ஓவர்களில் ஓரளவு இந்திய பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக பந்துவீசியதால் அந்த அணி 203 ரன்களில் கட்டுப்பட்டது.
இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், சாஹல், சிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆரம்பமே அதிர்ச்சி:
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 7 ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 32 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்தார்.
நங்கூரமாக நிலைத்த ஸ்ரேயாஸ் ஐயர்:
மனிஷ் பாண்டேயுடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப்பாதையில் பயணிக்க வைத்தார். 29 பந்துகளை சந்தித்த ஐயர் 58 ரன்களும், 12 பந்துகளில் மனிஷ் பாண்டே 14 ரன்களும் எடுத்தனர்.
ஆட்டத்தின் 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு தொடரில் முதல் வெற்றியை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுத்தந்தார். இதன் மூலம் ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.