கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் வேகமாக சாப்பிடும் போது வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த நாட்டின் குயின்ஸ்லாந்தில் கடற்கரையில் உள்ள ஹெர்வி பே (Hervey Bay) என்னும் ஹோட்டலில் அந்த நாட்டின் பாரம்பரிய கேக்கான லாமிங்டன் (Lamington) எனும் கேக் உண்ணும் போட்டி நடைப்பெற்றது.
அதில், கலந்து கொண்ட 60 வயதான பெண் ஒருவர், அந்த கேக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டு முடிப்பதற்காக வேகமாக சாப்பிட்டுள்ளார்.
தேங்காய் மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட லாமிங்டன் கேக் ஸ்பான்ச் போன்று இருக்கும். கேக் துண்டுகளை வேகமாக எடுத்து வாய்க்குள் வைத்து திணிக்க முயன்ற போது, அந்தப் பெண்மணிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹோட்டலிலேயே முதுலுதவி செய்யப்பட்டாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்தப் பெண்மணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியை நடத்திய உணவகம், உயிரிழந்த பெண்மணிக்கும், அவரது குடும்பத்துக்கும் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.