உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் வசித்து வருபவர் ஸ்வயம் குமார் என்ற 12ம் வகுப்பு படிக்கும் மாணவர். இவர் கடந்த 24ம் தேதி காணாமல் போயுள்ளதாக தகவல் வந்துள்ளது. காலையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்ற அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து, அன்று இரவு ஃபேஸ்புக்கில் அந்த சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு, மகனை விடுவிக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன அச்சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார், போனில் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை, செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. அந்த சிறுவன் கடத்தபடவில்லை, பெற்றோருக்கு பயந்து தன்னை யாரோ கடத்தியுள்ளது போல் சிறுவனே நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து சிறுவனிடம் விசாரித்ததில், அன்று பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும் இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் இவ்வாறு செய்ததாகக் காவல் துறையிடம் தெரிவித்துள்ளான். அதன் பின்னர், போலீசார் அந்த சிறுவனுக்கு அறிவுரை வழங்கி, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.