காதல் தோல்விக்கு என்ன மருந்து..!!

காதல் ஒருவருக்கு வாழ்வும் கொடுக்கும், வீழ்த்தவும் செய்யும். காதல் தோல்வியின் போது தவறான பாதைக்குச் செல்லாமல், அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வாழ்க்கையில் எப்படி சாதிக்கலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் வருமாறு.

காதல் தோல்வி அடைந்தவர்களின் எதிர்பார்ப்புகள் ஆரம்பத்தில் எப்படி இருக்கும்?

நமக்கு நெருக்கமானவர்கள் இறந்தால் அவர்களின் இறப்பை, எப்படி நம் மனம் ஏற்க மறுக்குமோ, அதற்கு இணையானதுதான் அன்பானவர்களின் பிரிவு. காதல் தோல்வியில் இருப்பவர்கள், அந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். நாங்கள் பிரிவதற்கு வாய்ப்பேயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், ஏதோவொரு காரணத்தால் பிரியும்போது, அதை ஜீரனிக்கமுடியாமல் தவிப்பார்கள். பிரிந்த காதல் மீண்டும் தேடிவரும் என்று நம்பிக்கொண்டே இருப்பார்கள்.

தனது அன்பான காதலனோ, காதலியோ தற்போது இல்லை என்பதை உணரத் தொடங்கியதும், கோபம்தான் முதலில் வெளிப்படும். கோபம் தன் மீதோ, விரும்பியவர்கள் மீதோ ஏற்படும். இந்தக் கோபத்தினால், ஆளுமை தன்மை குறைபாடு (Pesonality Disorder) இருப்பவர்கள் கொலை, ஆஸிட் வீசுவது போன்ற வன்முறைகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.இழந்த உறவு மீண்டும் கிடைத்துவிடாதா என எண்ணி அதற்காக விரும்பியவர்களிடம், ’உனக்காக எல்லாம் செய்வேன், விட்டுக்கொடுக்கிறேன்’ என்று கெஞ்சி பேரம் பேசத்தொடங்குவார்கள். இந்த மூன்று நிலைகளையும் உணர்ந்து கடந்தபின் பிரிவுதான் முடிவு என்பது தெரியும்போது மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

காதல் தோல்வியினால் உருவாகும் மனச்சோர்விலிருந்து விடுபட செய்ய வேண்டியவை:

வலியை ஏற்றுக் கொள்ளுங்கள்

பெரும்பாலனாவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனச்சோர்வை கவனிக்காமல் வெவ்வேறு வேலைகளில் கவனம் செலுத்தினால் போதும் இதைக் கடத்து விடலாம் என நினைப்பார்கள். இந்த தப்பிக்கும், தவிர்க்கும் மனநிலை தவறானது. காதலனோ, காதலியோ பிரிந்துவிட்டால், அதனால் ஏற்படும் மனச்சோர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரிவை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் அதிலிருந்து மீளவே முடியும்.

நண்பர்களிடம் பேசுங்கள்

உங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்த, உங்கள் காதலை நன்றாக அறிந்த நண்பர்களிடம் காதல் தோல்வி குறித்தும், பிரிவு குறித்தும் விளக்கமாகச் சொல்வது நல்லது. உணர்வுகளைத் தேக்கி வைக்காமல் நண்பர்களிடம் வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் மிகை உணர்ச்சிகள் குறைந்து, இனி என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியும்.

பொழுதுபோக்கு அவசியம்

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை காதலனுடனோ, காதலியுடனோ கழித்திருப்பார்கள். அவர்கள் இப்போது இல்லை என்பதால், காதல் தோல்வியில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்வார்கள். தினமும் செய்யும் வேலைகளைக் கூட செய்யாமல் வெறுமையாக இருப்பார்கள்.

இந்த நேரத்தை ஆரோக்கியமான முறையில்  செலவிட வேண்டும். உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹாபி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சியாக இருந்தால் நல்லது. காதல் தோல்வியால் சோகமாக இருக்கும்போது உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உடற்பயிற்சி சரி செய்ய உதவும். இதனால் மனஅழுத்தம் குறையும்.

மன அழுத்தத்தை உணர்ச்சிபூர்வமாக கையாளாதீர்கள்

காதல் தோல்வியால் ஏற்படும் அதிகமான மனஅழுத்தத்தால் தன் இயல்பை மீறி அதிகமாக சாப்பிடவும், தூங்கவும் செய்வார்கள். சிலர் கடைகளுக்குச் சென்று அதிகமாக பொருட்களை வாங்கிச் சேர்ப்பார்கள்.  சிலர் கூடுதல் மகிழ்ச்சியுடன்  இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொள்வார்கள்.

இவை மனச்சோர்வின் அறிகுறிகள்தான். போதிய விழிப்புணர்வு இல்லாமல் இம்மாதிரியான செயல்களைச்  செய்வார்கள்.

தற்போது வரும் பல திரைப்படங்களும் காதல் தோல்வியென்றால் மதுப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன. மது அருந்தும் போது, மூளையில் இருக்கும் நியூரோட்ரான்ஸ்மீட்டர் (Neurotransmitter), தற்காலிகமான மகிழ்ச்சியையே கொடுக்கும். இப்பழக்கம் தொடர்ந்தால் மதுவுக்கு அடிமையாவார்கள். இதுபோன்ற பலவீனப்படுத்தும் செயல்களுக்கு இடம் கொடுக்காமல், உடற்பயிற்சி போன்ற பொழுதுபோக்குகளில் கவனத்தை செலுத்துவது நல்லது.

பயணம்

காதல் என்ற இயற்கை தந்த மனச்சோர்வை நோயை குணமாக்க இயற்கையே மருந்து. பசுமை சூழ்ந்த, மலைப் பிரதேசம் போன்ற உங்கள் மனம் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்யலாம். பயணங்கள் எப்போதும் ஒரு நல்ல மனநிலையைக் கொடுக்கும்.

வாழ்கையில் பிரிவு இயல்பானதே, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.