கொழும்பிலுள்ள சதொச விற்பனை நிலையத் தின் களஞ்சியசாலையில் 19,700 கிலோவுக்கும் அதிகமான பாவனைக்கு உதவாத அரிசி நேற்றையதினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த அரிசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
கொழும்பு சதொச அரிசிக் களஞ்சியசாலையில் பாவனைகுதவத 19,700 கிலோ அரிசி கண்டுபிடிக்கபட்டுள்ள நிலையில் அவை மாளிகாவத்தைக்குக் கொண்டு சென்று புதைக்கப்படவுள்ளன.
மேலும் 1000 கிலோவுக்கும் அதிக அரிசி வேறாகப்பொதி செய்யப்பட்டுள்ளதுடன் பருப்பு மற்றும் சோளம் என்பனவும் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அரிசி விலங்குகளுக்குக் கூட உண்ணக் கொடுக்க முடியாதவை என்பதுடன் அவை கட்டாயமாக அழிக்கப்படவேண்டும்.
எனினும் இவ்வாறு சிறிதளவும் பிரயோசனப்படாமல் போகும்வரை இந்த தொகையான அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதே எமது கேள்வி.எமது நாட்டில் போதியளவு அரிசி உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமக்கு ஒரு வருடத்துக்கு 36 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி போதுமானதாக உள்ளபோதும் சுமார் 45 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு தேவைக்கும் அதிகமாக அரசி உற்பத்தி செய்யப்படும் போது ஏன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது?இதன் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
பொது மக்களின் பணமே இதற்காகச் செலவிடப் பட்டுள்ளபோதும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மக்களுக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எவ்வித தேவையும் இன்றி இவ்வாறு அரிசி இறக்குமதி செய்யப்படுவது அமைச்சர்களின் சுயநலனுக்காகவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தாலேயே இவ்வாறு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இதே போன்று கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியிலும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படாமல் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.