திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு. கலைஞர் காலம் முதல் ஸ்டாலின் காலம் வரை திமுக மாவட்டச் செயலாளர்கள் அவ்வளவு எளிதாக மாற்றப்படுவதில்லை.
திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது அமைச்சர் பதவியை காட்டிலும் அதிகாரமிக்கது. இதனால் எம்எல்ஏ, எம்பி சீட் கிடைக்கவில்லை என்றாலும் கூட மாவட்டச் செயலாளர் பதவியில் நீடிக்கவே திமுக பிரமுகர்கள் விரும்புவர். மேலும் திமுகவில் இருக்கும் ஒவ்வொரு நிர்வாகிக்கும் மாவட்டச் செயலாளர் பதவி மீது தீராத காதல் இருக்கும். அந்த அளவிற்கு அந்த பதவிக்கு அதிகாரம் உண்டு.
அந்த வகையில் கலைஞர் இருந்த போது 2014ம் ஆண்டு வரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர் என மொத்தமே 30 முதல் 35 பேர் மட்டுமே இருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நபர் தான் பல வருடங்களாக திமுகவில் கோலோச்சி வந்தனர். விழுப்புரம் என்றால் பொன்முடி, தஞ்சை என்றால் பழனிமாணிக்கம், கோசி மணி, திருவண்ணாமலை என்றால் எவ வேலு, திருச்சி என்றால் கே.என் நேரு, விருதுநகர் என்றால் கேகேஎஸ்எஸ் ஆர்.
இப்படி பல ஆண்டுகளாக ஒருவரே ஒரு மாவட்டத்தை கட்டி ஆண்டு வந்த நிலையில் 2014 தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகவும், மூன்றாகவும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கப்பட்டனர். கலைஞர் அனுதாபிகளுக்கு கல்தா கொடுக்கப்பட்டு ஸ்டாலின் ஆதரவு நிலை கொண்டவர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றது முதலே முக்கிய மாவட்டங்களுக்கு அவர் சென்று வந்தார். இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து பேசவே மாவட்டம் தோறும் செல்வதாக உதயநிதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாவட்டச் செயலாளர்கள் பதவி மாற்றம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திற்கும் உதயநிதி சென்று வந்துள்ளார்.
உதாரணமாக திருச்சி, சேலம், நாமக்கல் என மூன்று மாவட்டங்களில் அதிரடியாக மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரிப்போர்ட் தான் என்கிறார்கள். அங்குள்ள கட்சி நிர்வாகிகள் கூறியது, கள நிலவரம் போன்றவற்றை ஆராய்ந்து மேலும் ஆளும் கட்சி பிரமுகர்களுடன் ரகசிய டீலிங் போன்றவற்றை எல்லாம் அறிந்து தான் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு ஏற்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் வேண்டும் என்பதாலும் அவர் விரும்பும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனிடையே சேலம் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டுள்ளதற்கு பரபரப்பு காரணம் கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சேலத்தில் படு தோல்வியை சந்தித்தது.
அதிலும் வீரபாண்டி ராஜா பொறுப்பாளராக இருந்த இடங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்துள்ளது. மேலும் அங்கு பாமக அதிக இடங்களில் வென்றுள்ளது. ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாசும் –வீரபாண்டி ராஜாவின் தந்தை வீரபாண்டி ஆறுமுகமும் நெருங்கிய நண்பர்கள். இதற்கிடையே பாமக நிர்வாகிகளுடன் ரகசிய டீலிங் எதுவும் நடைபெற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.