நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என வருமானவரித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர் ஆஜராகவில்லை என தெரியவந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பைனான்சியர் அலுவலகங்களில் இருந்து ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது.
ஆவணங்களில் இருந்த தகவல் அடிப்படையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடமும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சென்னை பனையூரில் உள்ள வீட்டுக்கு காரில் அழைத்து வந்தும் விசாரித்தனர். வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை பல மணி நேரம் நீடித்து முடிவு பெற்றது.
இதில் விஜய் வீட்டில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானதால் இந்த விடயம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் புதிய திருப்பமாக நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரமுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வருமான வரித்துறையின் விசாரணைக்கு நடிகர் விஜய் இன்று ஆஜராகவில்லை என தெரியவந்துள்ளது.
மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் நேரில் ஆஜராக விஜய் அவகாசம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.