அவதாரை மிஞ்சிய அவெஞ்சர்ஸ்.

22-ம் நூற்றாண்டின் கதை எப்படி இருக்கும்? முக்கியமாக, இது நம் உலகில் நடப்பது இல்லை. ஆனால், அதே ஆக்கிரமிப்பு, மற்றவர்கள் நிலத்திற்கு உரிமை கொண்டாடுதல், ஓர் இனத்தை அடக்கி ஆளுதல், அடிமைகளாக நடத்துதல் என அதே சுயநலமிக்க மனிதர்கள்தான் இங்கும் உலாவுகிறார்கள்.

அவர்களின் அடக்குமுறையாலும் அரசியலாலும் பாதிக்கப்படும் பாண்டோரா கிரகத்து மக்களான ‘நவி’ இனத்தவரின் கதையாக விரிந்தது ‘அவதார்.’ ஒன்லைனாகப் பார்த்தால் கிட்டத்தட்ட நம்மூர் ‘வியட்நாம் காலனி’ கதைதான். ஒரு நிலத்தில் இருக்கும் பூர்வகுடியை விரட்ட கார்ப்பரேட் கம்பெனி ஆதிக்க சக்தி ஒன்று தன்னுடைய ஆள் ஒருவனை அந்த மக்களோடு பழக அனுப்புகிறது.

மக்கள் மனதை மாற்ற உள்ளே சென்றவன் அந்த மக்களில் ஒருவனாகவே ஆகிவிடுகிறான். அன்பு, துரோகம், காதல், சென்டிமென்ட் என வழக்கமான டெம்ப்ளேட்டில், வேற்றுக்கிரகத்தின் மாயாஜாலங்கள், விநோத மிருகங்கள், இடங்கள், ஏலியன்கள் என வண்ணம் சேர்த்திருப்பார்கள். அதை நம்பகத்தன்மையுடன் திரையில் காட்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் டீம் டெக்னிக்கல் ரீதியாக இதுவரை யாரும் தொடாத உச்சத்தைத் தொட்டது.

சொல்லப்போனால், தற்போது இருக்கும் 3D படங்களின் வருகைக்கு விதை போட்டது ‘அவதார்’ உலகின் பிரமாண்டம்தான். அது மட்டுமன்றி ‘மோஷன் கேப்ஷர்’ தொழில்நுட்பத்தை முதன்முறையாகப் பெரிய அளவில் நடைமுறைப் படுத்தியதும் இந்தப் படம்தான். 2009-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் வீச்சை, பிரமாண்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் உணரவேண்டும் என்பதற்காகவே பல திரையரங்குகள் டெக்னிக் கலாகத் தங்களை மேம்படுத்திக் கொண்டன.

`அவதார்’ படத்தின் வசூல் சாதனையைச் சமீபத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’தான் முறியடித்தது. அதாவது, பெரிய நட்சத்திரப் பட்டாளம், புதிய கதை என ஏதுமில்லாமல் டெக்னிக்கல் பிரமாண்டத்தை மட்டுமே நம்பிக் களமிறங்கிய ஒரு படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் போராடியிருக்கிறது ஹாலிவுட்.

அதையும் பல சூப்பர்ஹீரோக்கள் ஒன்றிணைந்த படத்தின் மூலம்தான் செய்து காட்டியிருக்கிறது. ‘அவதார்’ முதல் பாகம் வெற்றிபெற்றால் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவிருப்பதாக 2006-ம் ஆண்டே தெரிவித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இதோ அதன் அடுத்தடுத்த 5 பாகங்கள் 2021, 2023, 2025 மற்றும் 2027 என வெளியாகவிருக்கின்றன.
சமீபத்தில் ‘அவதார் 2’-ன் கான்சப்ட் ஆர்ட் (செயல்வடிவங்களின் மாதிரி) படங்கள் வெளியாகின. அதில் ‘பாண்டோரா’வில் இதுவரை நாம் பார்த்திராத இன்னும் பல இடங்கள் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, பாண்டோராவின் கடல் எப்படி இருக்கும் எனக் காட்டியிருக்கிறார்கள்.

தண்ணீருக்குள் நிகழும் காட்சிகள் குறித்து ஏற்கெனவே ஜேம்ஸ் கேமரூன் பல இடங்களில் சிலாகித்திருந்தார். நவி மக்களில் ஒரு குறிப்பிட்ட கடல்வாழ் மக்களை இதன் மூலம் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். கதைப்படி ‘அவதார்’ முதல் பாகத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த ‘அவதார் 2’-ல் அதே பழைய கதாபாத்திரங்களுடன் ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட்டும் இணைந்திருக்கிறார்.

250 மில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்தப் படத்தில் டெக்னிக்கலாக கேமரூன் வேறு என்னவெல்லாம் மாயாஜாலம் செய்யவிருக்கிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்தப் பூலோகவாசிகள்!