யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக தீவகப் பகுதியின் வளர்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தன் இயலுமைக்குட்பட்ட வகையில் நிறைந்தளவான பங்களிப்பை ஆற்றிவருவதாக யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (12) அல்லைப்பிட்டி பிலிப் நேரியார் தேவாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நலன்விரும்பிகளின் மேலதிக உதவியோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜிம்பிறவுண் அடிகளார் ஞாபகார்த்த மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ் மறை மாவட்ட ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில், எமது அருட்தந்தையாக இருந்து மக்களுக்காக மனிதாபிமானப் பணியாற்றி தன்னையே தியாகம் செய்த ஜிம்பிறவுண் அடிகளாரை நினைவிற் கொண்டு அவரது பெயரில் பிலிப்நேரியார் ஆலயத்தில் குருமார்கள் தங்குவதற்கான மண்டபத்தை அமைப்பதற்கு பத்து இலட்சம் ரூபாவையும், அவரது பெயரிலுள்ள அல்லைப்பிட்டி ஜிம்பிறவுண் வீதிப் புனரமைப்புக்கென இருபது இலட்சம் ரூபாவையும் ஒதுக்கித்தந்ததோடு மட்டுமல்லாது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் ஒரு தீவக மைந்தனாக இருந்து, தீவகப்பகுதி மேல் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதோடு, அரசியற் தலைவர்கள் பலரும் செல்லத் தயங்குகின்ற தூர தேசங்களிலுள்ள தனித்தீவுகளுக்கு கூட தன்னுடைய நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீதிகள், பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் என பல்வேறு விதமான அபிவிருத்திப் பணிகளை ஆற்றிவருகின்றமை பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அல்லைப்பிட்டி பிலிப்நேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார், வேலணைப் பிரதேசசபை உறுப்பினர்களான பிரான்சிஸ், தங்கராணிஆகியோரோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தீவகக்கிளையின் உறுப்பினர்களான கனகையா, சின்னமணி (பெனடிற்) ஆகியோர் உட்பட்ட அல்லைபிட்டி சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்
அதேவேளை அல்லைப்பிட்டி வட்டாரத்தில் ஊர் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 9 வீதிகளின் புனரமைப்புக்கென 18மில்லியன் ரூபாவும், 3 ஆலயங்கள் மற்றும் 2 தேவாலயங்களின் புனரமைப்புக்கென 2.2மில்லியன் ரூபாவும் 2 பாடசாலைகளின் சிறுவர் பூங்கா புனரமைப்புக்கென ஒரு மில்லியன் ரூபாவுமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் 16 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 21.2மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.