காதலனும் இல்லை, கணவனும் இல்லை… சுவாரசியமான பெண்!

சிரிப்பும் மகிழ்ச்சியுமாகவும் இருக்கும் சந்தியா நவீனமான உடைகளை அணிந்திருக்கிறார். ஆனால் அவருக்கு 40 வயது என்று சொல்வதை நம்ப முடியவில்லை.

“உங்களை பார்ப்பதற்கு 30 வயது போல இருக்கிறது! 40 வயது என்றால் நம்பவே முடியவில்லை. உங்கள் இளமையின் ரகசியம் என்ன?”

“ரகசியத்தை சொல்லட்டுமா? – காதலன் இல்லை, கணவன் இல்லை, குடும்பம் இல்லை, பதற்றம் இல்லை” என்று சந்தியா சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறார்.

சந்தியா பன்சால் பிரபல நிறுவனம் ஒன்றில் மார்கெடிங் துறை அதிகாரியாக பணிபுரிகிறார். டெல்லி-என்.சி.ஆரில் ஒரு வாடகை பிளாட்டில் தனியாக வசிக்கிறார்.

சந்தியாவுக்கு பாலியல் நாட்டம் அற்றவர். அவருக்கு பாலியல் ரீதியான ஈர்ப்போ, விருப்பமோ இல்லாததால், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார். குடும்பம் குறித்த அவரது கருத்துக்கள் முற்றிலும் வேறுபட்டவை.

பொதுவாக ஆணோ அல்லது பெண்ணோ பாலியம் நாட்டம் இல்லாதவர்களை பாலியல் ஈர்ப்பை உணராதவர்கள் Asexual என்று கூறுகிறார்கள். இது ஒரு விதமான பாலியல் நோக்குநிலை என்று சொல்கிறோம்.‘அடையாளம் என்பது எப்போதும் குடும்பத்தை விட உயர்வானது’

பாரம்பரிய குடும்ப கட்டமைப்பில் பிணைந்து, தனது சொந்த அடையாளத்தை இழக்க சந்தியா விரும்பவில்லை.

ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது முக்கியம் என்று அவர் நம்பவில்லை. ஒவ்வொரு நபருக்கும், குடும்பத்திற்கும் வித்தியாசமான வரையறை இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

“23-24 வயதில், நான் வித்தியாசமாக இருப்பதாக உணர ஆரம்பித்தேன். எனது வயது பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருந்தனர், அவர்கள் இளைஞர்களுடன் டேட்டிங் சென்றார்கள், காதலித்தனர். ஆனால், எனக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை. ”

சந்தியாவுக்கு ஆண்களை பிடிக்காதா என்ற கேள்வி எழுப்பினால், அப்படி ஏதும் இல்லை என்கிறார் அவர்.

“அந்த சமயத்தில் ஒரு இளைஞனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுடன் இருப்பதை விரும்பினேன். நாளாக ஆக, அவனது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. அது இயல்பானது தான். ஆனால் இந்த விஷயம் உடலுறவு என்ற நிலைக்கு வந்தபோது, எனக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டது.” என் உடலால் இதை ஏற்க முடியாது என்பதை உணர்ந்தேன். எனக்கு செக்ஸ் தேவையில்லை என்பது போல உணர்ந்தேன்.

சந்தியாவின் மனதில் செக்ஸ் பற்றிய எந்தவித அச்சமும் இல்லை. அதேபோல் செக்ஸ் இல்லாமல், வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வும் அவருக்கு ஏற்படவில்லை.

உங்கள் பாலுணர்வை எவ்வாறு அடையாளம் காண்பது?

“நான் காதலை உணர்ந்தேன், ஆனால் யார் மீதும் எந்தவிதமான பாலியல் ஈர்ப்பையும் உணரவில்லை. நான் நேசித்தவரின் கையைப் பிடித்துக் கொள்ள விரும்பினேன், அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவனுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் எல்லாவற்றையும் விரும்பினேன், ஆனால் உடலுறவின் போது அது சங்கடமாக இருந்தது. என் உடல் பதிலளிப்பதை நிறுத்திக்கொணடது” என்கிறார் சந்தியா.

இதுபோன்ற அனுபவங்கள் சந்தியாவுக்கு பல முறை நடந்தன. ஒவ்வொரு முறையும் உடல் ரீதியான நெருக்கம் என்ற நிலையை எட்டும்போது பின்வாங்கிவிடுவார். இந்த விஷயங்களை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

இருந்தாலும்கூட, சந்தியா மருத்துவரிடம் செல்வதற்கு முன்பு இதைப் பற்றி படிக்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினார். இதற்காக, இணையத்தில் தேடினார். பாலியல் தொடர்பான தகவல்களை வழங்கும் வெவ்வேறு வலைத்தளங்களின் உதவியை நாடினார்.

சமூக ஊடகங்களில் Asexuality தொடர்பான சில குழுக்களுடன் இணைந்தார்.

சந்தியா கூறுகிறார், “ஆரம்பத்தில் எனக்கு ஒரு கடுமையான பிரச்சினை இருப்பதாக உணர்ந்தேன். எனது உறவை முறித்துக் கொண்டதற்காக என்னையே நான் குற்றம் சாட்டத் தொடங்கினேன், ஆனால் பாலியல் பற்றி படிக்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்கியதும், என்னையே நான் கண்டுபிடித்தேன், உணரத் தொடங்கினேன். காலப்போக்கில் அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன். எனக்கு எந்த நோயும் இல்லை, நான் அசாதாரணமான பெண் அல்ல என்பதை படிப்படியாக புரிந்துகொண்டேன். சமூக ஊடகங்கள் மூலம் நான் மற்ற வித்தியாசமான பாலியல் நாட்டம் கொண்டவர்களுடன் பழகினேன். அங்கு எனது உடல் மற்றும் பாலியல் ரீதியான நிலைப்பாட்டை புரிந்துக் கொள்வதற்கான தளம் கிடைத்ததது. ”

இதற்குப் பிறகு அவர் தனக்கென ஒரு இணையை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையா?

இதற்கு பதிலளிக்கும் சந்தியா, “நான் ஒரு ஆணுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டால், சிறிது காலத்திற்குப் பிறகு அவனது எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று எனது பல அனுபவங்களிலிருந்து புரிந்துகொண்டேன். இதற்கிடையில் எனது சரியான அடையாளம் என்ன என்பதைப் பற்றி மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு நிலையிலும் எனது ஆளுமையை, யாருக்காவும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. பாலியல் நாட்டம் இல்லாத ஒரு இளைஞன் மட்டுமே என் இணையாக இருக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன். அதனால் தான் டேட்டிங்கு செல்வது மற்றும் எனக்கான இணையை தேடும் முயற்சிகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.”

எந்த வகையான குடும்பத்தை விரும்புகிறார் சந்தியா?

பாலியல் நாட்டம் இல்லாத குழுக்களில் இருந்து வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க முடியவில்லையா?

இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளிக்கும் சந்தியா, சமூக ஊடகங்களில் தான் பலரை சந்தித்ததாகவும், ஆனால் நிஜ வாழ்க்கையில் அதுபோல யாரையும் சந்திக்கவில்லை என்று சந்தியா கூறுகிறார்.

“பலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள், ஆனால் சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தங்களை புரிந்து கொள்வதில்லை. சமூக மற்றும் குடும்ப அழுத்தங்களால் சிலர் தங்கள் பாலுணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருக்கின்றனர்” என்கிறார் சந்தியா.

உண்மையில் தனக்கு ஏற்றவாறு தனது Asexuality மனநிலையுடன் ஒத்துப் போகும் ஒரு நல்ல ஆணைக் கண்டுபிடித்தால், நிச்சயமாக அவரைப் பற்றி சிந்திக்க தயாராக இருப்பதாக சந்தியா கூறுகிறார்.

ஒரு பாலியல் நாட்டமற்ற பெண்ணாக இருக்கும் சந்தியாவுக்கு குடும்பம் என்றால் என்ன? அதன் அர்த்தமாக எதைக் கருதுகிறார்?

“இப்போதைக்கு நான் தனியாக இருக்கிறேன், வரவிருக்கும் காலத்திலும் நான் தனியாகவே இருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போது, எனது நண்பர்கள், தோழிகள் மற்றும் எனது கட்டடத்தில் வசிக்கும் பெண்கள் தான் எனது குடும்பம். நாங்கள் தனித்தனி அறைகளில் வசிக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு பொதுவான சமையலறை உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களில் பரஸ்பரம் பங்கேற்கிறோம். சந்திக்கிறோம், பேசுகிறோம், ஒன்றாக இருக்கிறோம். இதுதான் எனக்கு குடும்பம். எனது சொந்த அடையாளம் சிதைந்து போகும் அளவுக்கு குடும்பம் என்னை ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை.”

‘தனியாக இருக்க பயப்பட வேண்டாம்’

தனக்கு ஏற்ற இணை கிடைத்தால் அவருடன் வாழ விரும்புகிறார் சந்தியா. ஆனால் இந்த உறவும் ஒரு வரம்பைக் கொண்டதாகவே இருக்கும் என்கிறார்.

“குடும்பம் என்ற வார்த்தை என் மனதில் தோன்றும்போது நானும் எனது துணையும் அதில் இருக்கிறோம், ஆனால் எங்களுக்கான தனி விருப்பங்களும், தெரிவுகளும் இருக்கும். நாங்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டும், ஆனால் எங்கள் அறைகள் தனித்தனியாக இருக்க வேண்டும். எங்கள் சமையலறையில் இருவரும் ஒன்றாக இணைந்து சமைக்கலாம். தனி அறைகளில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் உணர்ச்சி ரீதியாக தேவைப்படும்போது, ஒன்றாக இருப்போம்” என்கிறார் சந்தியா.

தாயாவது மற்றும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது பற்றி கேட்டதற்கு சந்தியா தெளிவாக பதில் கூறுகிறார், “எனக்கு மற்றவர்களுடைய குழந்தைகளே மிகவும் பிடிக்கும். எனக்கு சொந்த குழந்தை தேவையில்லை, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதது ஒரு பெண்ணை எந்த விதத்திலும் தரம் தாழ்த்துவதாக நான் நினைக்கவில்லை.”

“நீங்கள் தனியாக இருப்பீர்களா, குழந்தைகள் இல்லையென்றால், வயதான காலத்தில் யார் உங்களை கவனித்துக்கொள்வார்கள் என்று பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள்” என்று சொல்லும் சந்தியா, தனது எளிய கேள்வியை முன்வைக்கிறார். “எல்லா முதியவர்களின் பிள்ளைகளும் பெற்றோரை கவனித்துக் கொள்கிறார்களா? நான் எனது முதுமைக் காலத்திற்காக சேமிக்கிறேன். முதலீடு செய்கிறேன், தனியாக இருக்கிறேன், என்னை நானே கவனித்துக் கொள்ள வேண்டும், அதனால் எனது உடல் நலம் மற்றும் உடற்தகுதி குறித்து நான் முழுமையான அக்கறையுடன் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நல்ல உணவை சாப்பிடுகிறேன், யோகா செய்கிறேன், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்றாக சிந்தித்து செயல்படுகிறேன் மனதில் கொண்டு எடுக்கிறேன்”.

திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தியாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும், அதை அவர் தெளிவாக இருக்க மறுத்துவிட்டார்.

‘திருமணம் செய்துக் கொள்ளாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய்விடாது’

‘என் தங்கைக்குத் திருமணம் ஆகிவிட்டது, எனவே திருமணம் செய்துக் கொள் என்ற அழுத்தம் எனக்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. ஆனால் நான் பிறரின் அவதூறுகளையோ, அறிவுரைகளையோ பொருட்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அதைக் கேட்பதையே நிறுத்திவிட்டேன். நான் தனியாக வாழ்கிறேன், முற்றிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் மதிய உணவையும், இரவு உணவையும் தனியாகவே சாப்பிடுகிறேன். தனியாகவே ஷாப்பிங் செல்கிறேன் … எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கூட, தனியாகவே மருத்துவரிடம் செல்கிறேன். திருமணமே வாழ்க்கையின் மிகப்பெரிய தேவை என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் மிகப்பெரிய தேவை சுதந்திரம் மற்றும் மன அமைதி மட்டுமே. வாழ்க்கையை விருப்பப்படி வாழ வேண்டும்’ என்கிறார் சந்தியா.

அலுவலகத்திலும் வெளி உலகிலும் உள்ளவர்களின் அணுகுமுறை என்ன?

சந்தியா இதைப் பற்றிக் கூறுகிறார், “40 வயதில் நான் தனிமையில் இருக்கிறேன், ஒரு உறவில் கூட இல்லை என்பதை யாரும் நம்பவில்லை. நான் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள். எனக்குப் பல உறவுகள் இருக்கும் அல்லது ஏதேனும் நோய் இருக்கும் அதனால் பொய் சொல்வதாக நினைக்கிறார்கள்”. என்னைப் பற்றி பலரும் பல்வேறுவிதமாகப் பேசுகிறார்கள், ஆனால் நான் அவர்கள் சொல்வதில் கவனம் செலுத்துவதில்லை. என் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், ஆனால் எனக்கு பாலியல் நாட்டம் இல்லை நான் ஒரு Asexual என்பதை அவர்களால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்களுக்கு என்னிடம் உள்ளது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர்கள் எனக்கு அறிவுறுத்துவார்கள். ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரியும் என்பதால் நான் மருத்துவரிடம் செல்வதற்கு ஒத்துக் கொள்வதில்லை.”

ஓரினச்சேர்க்கை, மூன்றாம் பாலினத்தவர் அல்லது பாலியல் உறவுகள் அங்கீகரிக்கப்பட்டால் குடும்ப அமைப்பு மோசமடையும் என்று உணரும் ஒரு பிரிவு சமூகத்தில் உள்ளது. “நான் மிகவும் எளிதான மொழியில் விளக்க முயற்சிக்கிறேன். எந்த தோட்டத்திலும் ஒரே நிறத்தில் பூக்கள் பூப்பதில்லை. சிவப்பு, மஞ்சள் ஊதா, வெள்ளை எனப் பல வண்ணங்களில் மலர்கள் மலர்வதால் தான் தோட்டம் அழகாக இருக்கிறது. இதேபோல், வெவ்வேறு நபர்களால் தான் படைப்பு அழகாக இருக்கிறது என்று சந்தியா கூறுகிறார். ”

உலக மக்கள் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கிறது, எனவே அதில் சிலர் திருமணம் செய்து பாரம்பரிய வழியில் குடும்பத்தை அமைக்கவில்லை என்றாலோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, எதுவும் கெட்டுவிடாது என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் சந்தியா.