புலம்பெயர் தமிழர்களின் பாணியில் விக்னேஷ்வரன்!

புலம்பெயர் தமிழர்களைப் போன்று வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தினதும் அமைச்சரவையினதும் அனுமதி இன்றி நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 311 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தமையே தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாகும்.

ஜஸ்மின் சூக்காவின் ஏற்றுக் கொள்ளப்படாத அறிக்கையைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படாத குற்றங்களை காரணம் காட்டி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்கா மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது.

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேவேளை, நிரூபிக்கப்படாத யுத்தக் குற்றங்களைக் காரணங்காட்டி இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத்தடையை வரவேற்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளமை தேசத் துரோக கருத்தாகும்.

புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்” என்றார்.