பெண்கள் உலக கோப்பை முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 132 ரன்கள் அடித்தது. அதனை விரட்டிய ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
சிட்னியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் கிரிக்கெட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு அபார தொடக்கம் கிடைத்தும் இந்திய வீராங்கனைகள் சொதப்பியதால் இந்திய அணி சவாலான இலக்கை அடைய முடியவில்லை.
முதல் 4 ஓவர்களில் 40 ரன்கள் குவித்த அணி அதன்பிறகு சொதப்பியதால், 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் தீப்தி சர்மா 49 ரன்களையும், ஷெபாலி 29 ரன்களையும், ஜெமிமா 26 ரன்களையும் அடித்தனர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே ஒருபுறம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் வந்த வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
51 ரன்கள் எடுத்து அலிசா ஹீலே ஆட்டமிழக்க, அடுத்து வந்தவீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். கார்ட்னர் 34 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழக்க, 19.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது
பூனம் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல வேகப்பந்து வீராங்கனை சிக்கா பாண்டே மிகச் சிறப்பாக பந்துவீசி 3.5 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜேஸ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, 2 விக்கெட் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.