யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அவரை அலைபேசிக்கு தொடர்பு கொண்ட நபரொருவர் தன்னை யாழ்.மாவட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் என அறிமுகம் செய்து கொண்டு , எனக்கு அவரசமாக 25ஆயிரம் ரூபாய் பணம் தேவைபடுகின்றது. நீர் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டேன். அவர் நீர் தான் தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதாக கூறினார். எனவே அருகில் எங்காவது ஈஸி காஸ் (ez case) மூலம் தம்முடைய தொலைபேசி இலக்கத்திற்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து அலைபேசி இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைத்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பின்னர் பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடம் சம்பவம் தொடர்பில் கூறிய போதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் அவருக்கு தெரியவந்துள்ளது.
இதேவேளை நேற்றையதினமும் யாழ் கிராம சேவையாளர்களிடமும் இதேபோல் மோசடியாளர்கள் பணம் பறித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பில் தெரிவித்த பொலிஸார்.
குறித்த கும்பல் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றதனால் , பெரும்பாலனவர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றதாகவும், எனினும் சிலர் முறைப்பாடுகள் செய்கின்றதாகவும் கூறியுள்ளனர்.
அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட அலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருப்பதாகவும் அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களிலோ அல்லது உயிரிழந்த நபர்களின் பெயர்களிலோ அந்த இலக்கங்கள் இருப்பனால் தமது விசாரணைகள் தடைப்பட்டுவிடுவதாக கூறுகின்றனர்.
எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தெரியாத நபர்கள் , புதிய அலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்கு பணம் செலுத்தாதீர்கள் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.