தமிழச்சியாக பிறந்து இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் அய்யப்பன் மற்றும் ராஜேஷ்வரி தம்பதிக்கு ஸ்ரீதேவி கடந்த 1963-ல் பிறந்தார்.
தனது ஏழாவது வயதில் தமிழ் திரையுலகில் நம்நாடு திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார்.
அவர் அதிக படங்கள் நடித்த பாலிவுட்டில் கடந்த 1975-ல் ஜூலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
கூர்மையான மூக்கு, பளிங்கு முகத்தில் ஊசலாடிய கண்கள் , சுருண்டு விழும் கேசம் என கிறங்கி போகும் மொத்த அழகையும் வாரி தன்னிடத்தே வைத்து கொண்டவர் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பு திறமையும் அவரை இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக உருவாக்கியது.
தமிழ், இந்தி திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், திரைப்படங்களிலும் முதலிடத்தை பிடித்தார்.
ஸ்ரீதேவி, மிதுன் சக்கரவர்த்தி என்ற நடிகரை கடந்த 1985-ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 1988-ல் பிரிந்த ஸ்ரீதேவி நடிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்தினார்.
இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை 1990-களில் டேட்டிங் சென்ற ஸ்ரீதேவி அவரை 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதேவி வாழ்க்கையில் பார்க்காத ஏற்ற இறக்கங்கள் இல்லை. பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றிய அவர் குறைவான பேச்சு, மென்மை போக்கு கொண்டவராகவே இறுதி வரையில் இருந்தார்.
எந்த உச்சத்துக்கு போனபோதும் கர்வம் இருந்ததில்லை, அப்பாவித்தனமும், குழந்தை மனதும் கொண்ட ஸ்ரீதேவிக்கு அதுவே மைனஸாகவும் இருந்தது காலத்தின் சோதனை என்று தான் சொல்ல வேண்டும்!ஏனெனில் ஸ்ரீதேவி அணுக முடியாதவராகவே இருந்திருக்கிறார்.
இந்நிலையில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.
அங்கு உள்ள ஹொட்டலில் தண்ணீர் தொட்டியில் அவர் சடலமாக கண்டுடெடுக்கப்பட்டார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.
தகனம் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஷ்வரத்தில் உள்ள கடலில் கரைக்கப்பட்டது.
ஸ்ரீதேவி ஒரு நடிகை மட்டுமல்ல, பண்பட்ட நடிப்பிற்குரிய ஒரு பயிற்சிக் கல்லூரியும் ஆவார். ஸ்ரீதேவி என்னும் தேவதை, 16 வயதினிலே மயிலுவாக, ஜானி அர்ச்சனாவாக, மூன்றாம்பிறை விஜியாக, தமிழ் சினிமாவின் ஆதர்ச கதாநாயாகியாக இன்னும் நூற்றாண்டு காலம் ரசிகர்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பார் என கூறினால் அது மிகையாகாது.