குணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி!

உள்ளூர் தொலைக்காட்சி பேட்டியளித்துக்கொண்டிருந்த கொரோனா நோயாளியை பீதியடைந்த மருத்துவர்கள் வேகமாக உள்ளே இழுத்து சென்றுள்ளனர்.

கோவிட் -19 கொரோனா வைரஸால் உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உறைந்திருக்கும் நிலையில், ஜார்ஜியாவில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

ஈரானிய குடிமகன் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து ஊடகங்களிடம் நேரலையில் பேசியுள்ளார்.

பெயர் வெளியிடப்படாத அந்த நபர், ஜார்ஜியா மக்களே..! மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி. ஜார்ஜியா மருத்துவமனை மருத்துவர்களுக்கும் நன்றி. இந்த மருத்துவமனை சரியானது மற்றும் தொழில்நேர்த்தியானது என பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும், யாரேனும் ஒரு மருத்துவர் வெளியில் வந்து நோயாளி பற்றி பேசுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

ஆனால் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அங்கு வந்த இரண்டு சுகாதார ஊழியர்கள், வேகமாக அவரை மீண்டும் திபிலிசி மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றனர்.

பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அவர் நலமாக இல்லை என அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.


தற்போது அந்த நபர், ஜார்ஜிய நகரமான அபஸ்துமானிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஈரானில் இருந்து அஜர்பைஜான் வழியாக நாட்டிற்குள் நுழைந்த ஒரு நபருக்கு கொரோனா தாக்குதல் இருப்பதை ஜார்ஜியா சுகாதார அமைச்சர் எகடெரின் டிக்கராட்ஸே புதன்கிழமையன்று உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.