பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது. இதைத் தொடா்ந்து, புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. வங்கி ஏடிஎம்களிலும் அதிக அளவில் ரூ.2,000 நோட்டுகள் நிரப்பப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரூ.2,000க்கு சில்லறை மாற்றுவதற்கு ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் உள்ளிட்ட பலா் சிரமப்பட்டனா். இதைக் கருத்தில் கொண்ட இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.2,000 நோட்டுகளைப் புதிதாக அச்சிடப் போவதில்லை என்று கடந்த ஆண்டு அறிவித்தது.
அதே வேளையில், ‘ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை, அதேசமயம், புதிய 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகளை நிரப்புவதை வங்கிகள் குறைத்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் இனி நிரப்பப்பட மாட்டாது என அறிவித்துவிட்டது.
இது தொடா்பாக மற்ற வங்கிகளும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.500 நோட்டுகளை அதிக அளவில் நிரப்ப வங்கிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.