இன்று பலரும் உடற்பயிற்சி செய்வது, உணவில் கட்டுப்பாடு என பல வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி, உணவு எடுத்துக்கொள்ளும் நேரமும் முக்கியமானது என்று கூறுகிறது ஓர் ஆய்வு.
உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள அல்லது உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் முதலில் நேரத்திற்கேற்றவாறு சாப்பிடுவது அவசியம்.
அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கெவின் கெல்லி, ஓவன் மெக்கின்னஸ், கார்ல் ஜான்சன் ஆகியோர் உடல் எடை குறித்த ஒரு ஆய்வினை மேற்கொண்டனர்.
சீரான எடைக்கும், எடை அதிகரிப்புக்கும் இடையிலான சமநிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உடல் எடை தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் உண்ணும் உணவு எவ்வாறு வளர்சிதை மாற்றமடைகிறது என்பதையும் பொறுத்தது.
உண்ணும் உணவில் எவ்வளவு கொழுப்புகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, நாம் எடுத்துக்கொள்ளும் நேரம் எத்தகையது, அது செரிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் உள்ளிட்டவைகளை பொறுத்து உடல் எடை அதிகரிக்கிறது.
நடுத்தர வயது மற்றும் வயதானவர்களின் வளர்சிதை மாற்றத்தை சுமார் 56 மணி நேரம் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து ந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆய்வில், மதிய உணவு மற்றும் இரவு உணவு தினமும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. மூன்றாவது உணவு மட்டும் வெவ்வேறு நேரங்களில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறை உணவு வழங்கப்பட்ட பின்னரும் வளர்சிதை மாற்றங்கள் குறித்த கணக்கீடுகள் எடுக்கப்பட்டன.
இதில் ஒரே நேரத்தில் உணவு கொடுக்கப்பட்டபோது பெரும்பாலாக உடலின் எடை அதிகரிக்கவில்லை. மாறாக, வெவ்வேறு நேரத்தில் உணவு கொடுக்கப்பட்டபோது, பின்னர் வளர்சிதை மாற்றங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
எனவே, உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் ஒரே நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.