கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் முக்கிய மாற்றம் கொண்டுவரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, பல உயிர்களை எடுத்து வருகிறது.
இதனால் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளான நாடுகள், சில முக்கிய தடைகளையும், விதிமுறைகளையும் கொண்டு வருகின்றன.
இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு தற்போது 31-ஐ தொட்டுள்ளதால், இதை கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸால், இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியை
தள்ளி வைக்கும் படி மத்திய அரசால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பிசிசிஐ மறுத்து வருகிறது.ஐபிஎல் போட்டிகளில் கோடிகளை முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் போட்டியை தள்ளிப்போடக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
அதற்கு அவர்கள் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை க்ளோஸ் கிரவுண்ட் மேட்ச் போல நடத்தலாம் என்று கூறியுள்ளனர்.
ரசிகர்கள் யாரும் இல்லாமல். வெறும் மைதானத்தில் வீரர்கள், நடுவர்கள் மட்டும் வைத்து போட்டியை நடத்தலாம். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் 30 முதல் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதில் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அதில், 50% அணிகளுக்கு செல்லும். மீதம், பிசிசிஐ அமைப்பிற்கு செல்லும். இது மொத்த போட்டி வருமானத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவு. ஐபிஎல் ரசிகர்களில் மொத்தம் 1 சதவீதம் பேர்தான் போட்டியை மைதானத்தில் பார்க்கிறார்கள்.
தற்போது, கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை டிக்கெட் வாங்குவதும் வெகுவாக குறையும். ஆனால் சாட்டிலைட் மூலமும், ஆன்லைன் மூலமும் பல லட்சம் பேர் போட்டிகளை பார்க்கிறார்கள்.
ஸ்டார் டிவி இந்த முறை 3270 கோடி கொடுத்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்புகிறது. இதனால், இந்த முறை ரசிகர்களை வர விடாமல் போட்டியை நடத்தினால் தொலைக்காட்சியில் போட்டியை பார்க்கும் எண்ணிக்கை அதிகம் ஆகும்.
இதனால் வருவாயும் அதிகம் ஆகும் என்று நம்பப்படுவதால், இந்தமுறை ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போட்டியை நேரில் பார்க்க ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி கவலையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.