தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகேயுள்ள வேப்பந்தம் பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் பணிக்காக கேரளாவில் தங்கியிருந்து பணிசெய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் தெய்வானை. இவர்கள் இருவருக்கும் கார்த்திகா (வயது 17) என்ற மகள் இருக்கிறார்.
கார்த்திகா தலைவாசல் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வரும் நிலையில், இவருக்கும் – சதீஷ் என்ற வாலிபனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் ஜோடிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த காதல் திருமணத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில், கார்த்திகாவுக்கும் 18 வயது பூர்த்தியாகாமல் இருந்ததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இது தொடர்பான புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கார்த்திகா சதீஸுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் கார்த்திகா விஷம் அருந்திவிட்டதாகவும், நீங்கள் உடனே மருத்துவமனைக்கு வருமாறும் சதீஷ் கார்த்திகாவின் தயாரான தெய்வானையிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகா விஷம் அருந்தி முதலில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தும் சிகிச்சை பலனில்லாது இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளான்.
இதனைக்கேட்டு பதறிய தெய்வானை சதீஷின் இல்லத்திற்கு வந்து மகளின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான புகாரில், எனக்கு மொத்தம் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். எனது பெரிய மகளான கார்த்திகாவை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வேப்பந்தம் சதீஷ், அவரது தந்தை அய்யாவு, சதீஷின் பெரியப்பா வெங்கடேசன், சதீஷின் மாமா மாணிக்கம், சதீஷின் தாயார் செல்வம் ஆகியோர் சேர்ந்து கட்டாயம் திருமணம் செய்து வைத்தனர்.
திருமண தேதியின் படி எனது மகளுக்கு பதினேழே முக்கால் வயது தான் ஆனது. இதனால் நானும், எனது கணவரும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம்.. எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தலைவாசல் காவல் அதிகாரிகள் மற்றும் சில நபர்கள் மிரட்டி, ஊரில் வசிக்காத வகையில் செய்துவிடுவோம், கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்களும் திரும்பி வந்துவிட்டோம்.
இந்த நேரத்தில், கார்த்திகா கடந்த 3 ஆம் தேதியன்று தன்னை தொடர்பு கொண்டு, எனது கணவருக்கு பஞ்சாயத்து கிளர்க் பணி வந்துள்ளது. எனக்கு ரூ.1 இலட்சம் வேண்டும் என்று கேட்டார். மேலும், ரூ.1 இலட்சம் எனது வீட்டில் இருந்து வாங்கி வர சொல்லி கணவரும், மாமனார் – மாமியாரும் வரதட்சணை கொடுமை செய்வதாக தெரிவித்தார். எனது தாயும் கேரளாவில் இருந்து அப்பா வரட்டும் என்று கூறியிருந்தேன்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்ட கார்த்திகா, எனது கணவரின் தங்கைக்கு மீண்டும் தொடர்பு கொண்டு மாமனார் மாமியார் செய்யும் கொடுமையை கூறி அழுதுள்ளார். சதீஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் சேர்ந்து வரதட்சணைக்காக எனது மகளை கொலை செய்துள்ளனர். இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.