புலம்பெயர் தமிழர்களிடம் சத்திரசிகிச்சைக்கு என மில்லியன் கணக்கான பணம் மோசடி! பொலிஸாரின் வலையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்!

புலம்பெயர் தமிழர்களிடம், சிறுமி ஒருவருக்கு சத்திரசிகிச்சைக்கு என பணம் சேகரித்து மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மட்டத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இராணுவத்தினரும் இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுழிபுரத்தில் சிறுமி ஒருவரின் சத்திரச்சிகிச்சைக்காக அவரது தந்தையார் நிதி உதவி கோரியிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அதில் பணியாற்றுவதாக மூவர் சிறுமியின் தந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு சிறுமியின் விவரங்களை வழங்கிய நிலையில் இணையத்தளங்களில் அவை வெளியிடப்பட்டன. சிறுமிக்கு உதவ விரும்புவோர் வைப்பிலிட வங்கிக் கணக்கிலக்கமும் வெளியிடப்பட்டது.

அந்த விவரங்களை அறிந்த புலம்பெயர் தமிழர்கள், சிறுமியின் சத்திரசிகிச்சைக்கு மில்லியன் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். எனினும் அந்த பணத்தில் ஒரு பகுதியே சிறுமியின் தந்தைக்கு கிடைத்துள்ளது.

மீதமுள்ள ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பணம் சம்பந்தப்பட்ட மூவரால் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த மூவரில் ஒருவர் அரச புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் என முறைப்பாட்டாளரின் விசாரணை ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தையிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் வாக்கு மூலம் பெற்ற நிலையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மோசடி விவகாரம் பொலிஸாரால் இழுத்தடிப்புச் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி மட்டத்துக்கு அறிக்கையிடப்பட்டு, இராணுவத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே வட்டுக்கோட்டை பொலிஸார் இந்த மோசடிச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன், மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.