தற்போதைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் போன் இல்லாத குடும்பமே இல்லை. இன்றைய தலைமுறை குழந்தைகள் அனைவரும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாக உள்ளனர். பெற்றோர்களும் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற்காகவே குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுக்கின்றனர்.
குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் :
பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி ஸ்மார்ட் செல்போனில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை.
மேலும் எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன் பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வழிகள் :
பெற்றோர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டுப்பாடு இல்லாதவரைக்கும் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.
கண்டிப்பாக குறிப்பிட்ட நேர அளவு மட்டும் உபயோகிக்க செய்யலாம்.
குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.
குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.
ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த காணொளியை காண்பிக்கலாம், எடுத்து சொல்லலாம்.
ஓவியம் வரைய, கலைப்பொருட்கள் உருவாக்க கற்றுக் கொடுங்கள்.
காரில் பயணிக்கும்போது உங்கள் ஊரைப் பற்றி, உறவுகளைப் பற்றி, அவர்களுக்கு பிடித்த இடத்தை பற்றி சொல்லி குழந்தைகளின் கவனம் ஸ்மார்ட் போன் பக்கம் போகாமல் மாற்றலாம்.
விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்கும். அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
தங்களின் சுயநலத்திற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிட்டு அவர்களின் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள்.