அலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கிறோம். சிலர் மதிய உணவுக்கு கூட இருக்கையை விட்டு எழுவது இல்லை. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. எனவே அலுவலகத்தில் ஆரோக்கியத்தைக் காக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு காண்போம்.
கம்ப்யூட்டர் திரையில் இருந்து 20-40 இன்ச் தொலைவில் அமர்ந்து வேலைப் பார்ப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை எடுத்து, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். நாற்காலி நம் கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
அலுவலகத்தில் இருக்கும் போது நம்முடைய கைகளை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்த வரை நமது கைகளுக்கு ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம். அடிக்கடி, கைகளுக்கான சில எளிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதனால் கைகள், தோள்பட்டை வலுவாகும்.
அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதேபோல் அலுவலகத்தில் அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறானதாகும். இதனை இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
மதிய உணவை சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்திலேயே மேசையில் அமர்ந்து மதிய உணவை உண்ணக்கூடாது.
வேலைப் பார்க்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, சூரிய வெளிச்சத்தையோ, மரத்தையோ பார்க்கலாம்.
நீங்கள் வேலை செய்யும் போது மேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம். நீங்கள் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது உங்கள் தண்ணீர் காலியாக உள்ளதா? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியத்தைத் தரும் உணவுப்பொருட்களை உண்ணலாம்.
அலுவலகத்தில் வேலை செய்யும் போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தலையை இடது, வலது புறமாகவும், மேலும், கீழுமாகவும் ஸ்ட்ரெச் செய்ய வேண்டும். இதனால் கழுத்து எலும்புகள் வலுப்பெறும்.