நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.
இருப்பினும் நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தனர், இந்த மனுக்களும் நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனால் கண்ணீர் விட்டழுத நிர்பயாவின் தாய், இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் கிடைத்த வெற்றி, எனது மகளுக்கு நீதி கிடைக்க உதவிய அனைத்து நாட்டு மக்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் நன்றி என தெரிவித்தார்.