யாழில் பரவியது கொரோனா! மருத்துவர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்து சமயத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் கட்டட நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவமனைக்கு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி,

நோயாளா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும். எனவும் கூறியுள்ளார்.

மதபோதகருடன் அரை மணி நேரம் பேசியதாக எமக்கு கூறியுள்ளார். தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி ஆகியவற்றினால் குறித்த நபா் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.