தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் புகுந்தது. மஸ்கட் நாட்டின் தலைநகர் ஓமனில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜினீயர் கொரோனா பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்த 20 வயதுடைய வட மாநில வாலிபர், அயர்லாந்து நாட்டில் இருந்து வந்த மாணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த வாலிபர் கொரோனால் தாக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த அந்நாட்டை சேர்ந்த 2 பேரும் கொரோனா பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்து, அங்கிருந்து ரெயில் மூலமாக கோவை வந்த மாணவியும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளார்.
அதேபோல், கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 வயது பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. கலிபோர்னியாவில் இருந்து வந்த பெண் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களை தனிமைப்படுத்தி இருக்கிறது.
அத்தியாவசிய பணிகளான மருந்து, மாத்திரைகள், சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை தவிர மற்ற போக்குவரத்து இந்த மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு நடக்காது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 9 பேரில் டெல்லியில் இருந்து வந்த ஒருவருடன் தொடர்பில் இருந்த 193 பேரை கண்காணித்து வருகிறோம்.
கலிபோர்னியா மற்றும் துபாயில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த 2 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 2 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது.
இதுவரை 443 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து இருக்கிறோம். இதில் 352 பேருக்கு நோய் தாக்கம் இல்லை. 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். 82 பேருடைய ரத்த பரிசோதனை முடிவு வர வேண்டி இருக்கிறது. முககவசம் விலையை ரூ.8, ரூ.10 என்று மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து இருக்கிறது. ‘சானிடைசர்’ (கிருமி நாசினி) அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்கீதப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ‘சானிடைசர்’ மற்றும் முககவசத்தை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உத்தரவாக பார்க்காமல், மக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு செய்வதுதான் சரியாக இருக்கும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவக்கூடிய முறை தொடர்பாக விழிப்புணர்வு செய்ய இருக்கிறோம். இதை இப்போதைக்கு மட்டுமின்றி தொடர்ந்து செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா.. உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச் சொல். உலகமே பதறிக் கிடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்க்கொல்லியின் வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு தூர நிற்பதே சாலச் சிறந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றபோது, காற்று புகாத கவச உடையும் முகக்கவசமும் அணிந்த அவர்களிடம் கனிவுடன் கேட்டேன்.
உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, ‘சேவை செய்வதே எங்கள் பணி. மனமாரச் செய்கிறோம். ஆனால் ஒரு சிரமம், கவச உடை அணிந்துள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை’ என்று டாக்டர் ஒருவர் கூறினார். நான் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
மெச்சுகிறேன் நம் மருத்துவத் துறையை. நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன். நம் சேவைகளால் வெல்லட்டும் மனிதம். வீழட்டும் உயிர்க்கொல்லி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.