சொகுசு நாட்டை மயானபூமியாக்கிய கொரோனா… ஒரேநாளில் 651பேர் பலி!

கொரொனா தொற்றுநோயால் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தாக்குதல் சீனாவைவிட இத்தாலியில் படுஉக்கிரமாக இருக்கிறது. இத்தாலியின் தெருக்கள் எங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள். இவற்றை மொத்தமாக எரியூட்டுவதா? புதைப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கிறது அந்த தேசம்.

அத்துடன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் அதிகரிக்கும் மரணங்கள். இதனால் ஒட்டுமொத்த இத்தாலி நாடும் உருக்குலைந்து போயுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 651 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.

பொருளாதாரம், மருத்துவ வசதி இரண்டும் இருந்தும் கொரோனாவை இத்தாலியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக இத்தாலியில் தங்கி படிக்கும் சீன மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போய்விட்டு மீண்டும் திரும்பியபோது அவர்களை சோதனை எதுவும் செய்யாமல் நாட்டில் அனுமதித்ததும் அதில் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மற்றொரு காரணமாக சமூகம் சார்ந்து இயங்கும் இத்தாலி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னரும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. இதனால் தான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் இந்திய அரசு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துரிதகதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒரு ஜோக் அல்ல சீரியஸான விஷயம் என்பதை இத்தாலியைப் பார்த்தாவது மற்ற நாடுகள் கற்றுக் கொள்ளுங்கள் என இறந்த சடலங்களை ராணுவம் கொண்டு அப்புறப்படுத்தும் வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அதனால் கொரோனாவை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்லாமல் சுய கட்டுப்பாட்டுடன் இருந்து சக மக்களைக் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்வது அவசியமாக உள்ளது.