பெண்கள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா.?

திருமணமான பெண்களை விட, திருமணமாகாத பெண்களே மகிழ்ச்சியாக இருப்பதாக அமெரிக்க நிறுவனம் செய்த ஆய்வு ஒன்றில் தெரியவருகிறது.

அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே (American Time Use Survey (ATUS)) நடத்திய வாக்கெடுப்பில் திருமணமான பெண்களோடு திருமணமாகாத பெண்கள், கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள் ஆகியோரோடு ஒப்பிட்டு அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துயரங்களைக் கண்டறிந்தார்கள்.

அதில் திருமணமான பெண்களைக் காட்டிலும் திருமணமாகாத, துணையில்லாத பெண்களின் துயரம் குறைவாக இருந்திருக்கிறது.

இதுகுறித்து பால் டோலன் பேராசிரியர் தான் எழுதிய ‘Happy ever after’ என்னும் புத்தகத்திலும் “திருமணங்கள் மூலம் ஆண்கள்தான் பலன் அடைகிறார்கள். பெண்கள் திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியை இழக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார். இதை அந்த ஆராய்ச்சியாளர்களும் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஆண்கள் திருமணத்திற்குப் பின் அமைதியாகவும், குறைவான சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர். தன் சம்பாத்தியத்தில் மகிழ்ச்சியுடனும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெண்கள் தன் தேவை, எதிர்பார்ப்புகள், மகிழ்ச்சி எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து வாழ்வதாகவும் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை.

இதே அவர்களுக்கு குடும்பம் இல்லை, குழந்தை , கணவர் இல்லை எனில், தான் நினைத்ததைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

இதேபோல் மார்கெட்டிங் இண்டலிஜன்ஸ் நிறுவனம் நடத்திய மற்றொரு ஆய்வில், 61 சதவிகித திருமணமாகாத பெண்கள் மகிழ்ச்சியோடு ஒவ்வொரு நாளையும் கடப்பதாகவும், 75 சதவிகித பெண்கள் தங்களுக்குத் திருமணமே வேண்டாம், எங்கள் வாழ்க்கைக்கு ஆண் துணையை எதிர்பார்க்கவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களுக்கான மகிழ்ச்சி என்பது அவர்களுடைய சுய விருப்பத்தைப் பொருத்தது. அவர்களுக்கு எப்போது, எந்த வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற பக்குவமும் அதிகரித்துள்ளது என்பது இந்த அறிக்கையின் மூலம் உலகறியச் செய்துள்ளது.