கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு, விரைந்து குணமாகுங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுப்பிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி வாயிலாக உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் விரைந்து குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். அதேபோல இருவரின் நெருக்கமான நட்புக்கு நன்றி தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் ஜி7, ஜி20 மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு கொரோனா வைரஸை முறியடிக்க முன்வந்துள்ளனர். இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெப்போதையும் விட வலிமையுடன் செயல்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் மோடியும் பொரிஸ் ஜோன்சன் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.