நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லம் தனிமைபடுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்க பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, குறிப்பாக அண்மையில் வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தபட்ட இல்லம் என்று அரசு சார்பில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தனிமைப்படுத்தபட்ட இல்லம் என்று நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர்கள், சிறிது நேரத்தில் நோட்டீஸை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர், சமீபத்தில் நடிகை கெளதமி வெளிநாடு சென்று வந்ததாகவும் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை அடிப்படையாக கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கெளதமி அந்த முகவரியில் தற்போது வசிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அகற்றப்பட்டதாகவும், அந்த இடத்தில் கமல்ஹாசனின் கட்சி அலுவலகம் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சில வருடங்களாகவே அந்த முகவரியில் தங்கவில்லை, மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம்தான் அங்கு செயல்பட்டு வருகிறது. சிறு குழப்பத்தின் காரணமாக அங்கு அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது, எனினும் கொரோனா பரவலை தடுக்க கடந்த இரு வாரங்களாகவே நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். எனவே மற்றவர்களும் இதை பின்பற்றி தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.