யாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை உடன் நிறுத்த உத்தரவிடும்படி வடக்கு ஆளுநரிடம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆனல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பித்த பின்னர், யாழ் மாநகரசபை பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாளாவிருந்த ஆர்னல்ட், நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நாளாந்தம் ஆளுனருக்கு கடிதம் எழுதுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இன்று அனுப்பிய கடிதத்தில்,
உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்களை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒரு அம்சமாகவே நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசின் குறித்த ஊரடங்கு சட்ட நோக்கத்தை முழுமைப்படுத்த முடியாத வகையில் மீன்பிடி செயற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. அதாவது யாழ் மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறைப் வரையான கரையோரப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தமது மீன் பிடி செயற்பாடுகளை வழமை போன்று தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஊரடங்கின் போதும் மக்கள் அதிகளவில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் இவ் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், ஒரு மரணமும் பதிவாகியிருக்கின்ற இக் கால கட்டத்தில் மாநகர கரையோரப் பகுதி மீன்பிடி செயற்பாடானது எமது மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாகவும், எதிர்பார்க்காத வகையில் பாரிய வைரஸ் தொற்று விளைவுகளையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும் என்று அச்சம் கொள்ள வைக்கின்றது.
எனவே யாழ் மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறைப் வரையான பகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துவிதமான மீன்பிடி செயற்பாடுகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடை விதிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாமதிக்காது உரிய தரப்பினர்க்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.
இக் கடிதத்தின் பிரதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கொழும்புத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் (வ-து), பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் (வ-து), குருநகர் ஐக்கிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் (வ-து), நாவாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் (வ-து) ஆகியவற்றின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.