தலைமுடி வறண்டு போவதால்தான் தலையில் பொடுகு ஏற்படுகிறது. பொடுகு வந்துவிட்டால் தலையில் கையை வைத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதன் அரிப்பு தாங்க முடியாது.
பொடுகு வந்துவிட்டால் அவர் உபயோகிக்கும் சீப்பு, டவல் மூலம் இன்னொருவருக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் பொடுகு தொல்லையால் இரவு தூக்கம் கூட கெட்டுப்போகும்.
அரிப்பு ஏற்படும் போது தலையை சொரிஞ்சு சொரிஞ்சு அந்த இடம் புண்ணாககூட வாய்ப்பு உள்ளது. அதுவும் வேலைக்கு செல்பவர்களுக்கு பொடுகு இருந்தால் இன்னும் பிரச்சினை.
சில பேர் பொடுகை போக்குவதற்கு நிறைய செலவு செய்வார்கள். இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிகள் இருக்கு. இயற்கையான முறையில் வைத்தியம் செய்தால் இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
பொடுகு போக்க வழிமுறைகள்
- இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசினால் பொடுகு குறையும். உடல் உஷ்ணமும் குறையும்.
- மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால் பொடுகு பிரச்சினைகள் நீங்கும்.
- தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை தீரும்.
- பாசிப்பயிறை ஊற வைத்து அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.
- கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை குணமாகும்.
- தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
- வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை சரியாகும்.
- துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து குளித்தால் பொடுகு பிரச்சினை போகும்.
- மருதாணி இலையை அரைத்து, கொஞ்சம் தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு பிரச்சினை நீங்கும்.
- நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
- தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் ஊறவைத்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
- முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு தொல்லை குணமாகும்.