சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியை சார்ந்தவர் வினோத்குமார் (வயது 27). இவர் உணவு டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஜனனி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற சண்டையை அடுத்து, ஜனனி ஆத்திரமடைந்து தனது தந்தையின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியை அழைத்து வர வினோத் கடந்த 27 ஆம் தேதி மாமனார் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடைபெற்றது. இதனை கவனித்த ஜனனியின் உறவினர் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பன் (வயது 58) என்பவர் இவர்களை சமாதானம் செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வினோத்குமார் மாரியப்பனை தாக்கவே, கீழே விழுந்த மாரியப்பன் பரிதாபமாக தலையில் அடிபட்டு துடித்துள்ளார். இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வினோத்தை கைது செய்துள்ளனர்.