கொரோனா வைரஸ் நோயினால் நாம் அச்சுறுத்தப்பட்டாலும் நாம் பல சவால்களை ஏற்று செயல்பட நேர்ந்தாலும் நாங்கள் இறை யோசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் எதிர் நோக்குடன் வாழ்வோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை யொட்டிய பரிசுத்த வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.
மன்னார் தூய செபஸ்தியார் புனித பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இன்று (5) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது மறை உரை ஆற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் கத்தோழிக்கர்கள் ஆகிய எங்களுக்கு ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. நாங்கள் எமது வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாத ஒரு நிலையில் உள்ளோம்.
அப்படியான ஒரு நிலை மன்னாரில் இருக்கும் உங்களுக்கு மாத்திரம் இல்லை மாறாக உலகம் முழுவதும் உள்ள மனித குலத்திற்கே ஏற்பட்டிருக்கும் ஒரு நிலை.
காரணம் என்ன? என்ற கேள்விக்கு நீங்கள் என்ன பதில் கொடுப்பீர்கள். எங்கள் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் கொடிய நோயினால் வாட்டி வதைக்கின்றது.
இந்த நிலையிலே நீங்களும் நாங்களும் பொது நல்லிணக்கத்திற்காகவும் எங்களுடைய சொந்த நலனுக்காகவும் வீட்டிற்குள் முடக்கி ஒடுக்கப் பட்டிருக்கின்றோம்.
இந்த நோயினால் நாம் அச்சுரூத்தப்பட்டாலும் நாம் பல சவால்களை ஏற்று செயல் பட நேர்ந்தாலும் நாங்கள் இறை யோசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் எதிர் நோக்குடன் வாழ்வோம்.
கொரோனா வைரஸ் நோய் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் இவ் வேளையில் புனித வாரத்தை நாம் ஆரம்பிக்கின்றோம்.
இக் கால கட்டத்தில் நாங்கள் என்ன வகையில் யேசுவின் திருப்பாடுகள், வேதனைகள், சிலுவை மரணத்தைப் பற்றி தியானித்து அவரோடு இணையலாம்.
தவக் காலத்திலே நாற்பது நாற்கலாக எப்படி நாங்கள் செபம்,தவம்,தியானம் என்கின்ற முயற்சிகளினால் எம்மை தூய்மை படுத்த முன்வந்தாரே அவைகளை நாங்கள் இப் புனித வாரத்திலே ஆழப்படுத்துவோம்.
-முற்று முழுதாக கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தவும் உலகம் வாழ் மக்கள் மீண்டும் நாளாந்த வாழ்க்கைக்கு திரும்பவும் எமக்கு இறை தந்தையின் இரக்கத்தையும், அன்பையும் பெற்றுத்தருமாறு உறுக்கமாக செபிப்போம் என தெரிவித்தார்.
திருப்பலி முடிவுற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தின் பாதுகாவலியாம் தூய செபஸ்தியாரின் திருச் சொரூப ஆசிர் வாதம் இறை மக்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயாரினால் வாழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.