மும்பையில் உள்ள புறநகரில் அமைந்துள்ள நாலா சோபாரா பகுதியை சார்ந்த 27 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பிரசவ தேதியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி முதல் மூச்சுவிட சிரமப்பட்டதை அடுத்து, இவரின் கணவர் அங்குள்ள மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
இவர்கள் ஆட்டோவிலேயே 70 கிமீ சென்ற நிலையில், மூன்று மருத்துவமனைகளில் ஏறி இறங்கியும் சிகிச்சை கிடைக்காது 4 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இவர் முதலில் அருகில் இருந்த நர்சிங் ஹோமை நாடிய நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மருத்துவர்கள் அனுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் அங்கிருந்து அரசின் சர்வோதயா மகப்பேறு இல்லத்திற்கு கொண்டு சென்ற சமயத்தில், தங்களால் இங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று அனுப்பியுள்ளனர். பின்னர் அவசர ஊர்தி கூட ஏற்பாடு செய்ய மனமில்லாது இருந்த நபர்களை பார்த்து, அதிகாலை சுமார் 2 மணியளவில் மும்பையில் உள்ள சதாப்தி மருத்துவமனையை அணுகியுள்ளனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் நுரையீரலில் நீர் உள்ளதை கண்டறிந்து, 30 கிமீ தொலைவில் இருக்கும் நாயர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த மருத்துவமனையில் அனுமதியான சிலமணித்துளிகளுக்கு உள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.