கொரோனா வைரஸ் பரவலை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை பெருமளவில் குறைத்த தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில் புதிதாக எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் பாதிப்பு குறித்து குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
தென்கொரியாவில் 10,450 பேருக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 208 பேர் உயிரிழந்த நிலையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
தற்போது குணமடைந்த நோயாளிகள் 91 பேருக்கு கொரோனா வைரஸால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், தொற்று நோய் குறித்த விசாரணை இதுவரை தொடங்கப்படவில்லை.
வரும் நாட்களில் தான் இதுகுறித்து தெளிவாக தகவல்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணமடையாமல் மீண்டும் வைரஸ் செயல்பட்டிருக்கலாம் என்று தொற்று நோய் பேராசிரியர் கிம் வூ-ஜூ கூறியுள்ளார்.
வைரஸ்களின் எச்சம் நோயாளிகளின் உடம்பில் இருக்கக்கூடும் அதன் காரணமாகவும் இதுபோன்ற விளைவு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவின் கீழ் உள்ள 57,000 பேரில் சிலர் கண்காணிப்பு வட்டத்தை விட்டு வெளியேறி நழுவிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.