சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 2,083,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 134,603 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 510,171 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் முதல் சிறுகுறு தொழில் வரை அனைத்தும் முடங்கியுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 3-ம் தேதிக்குப் பிறகு திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மே 31ஆம் தேதி IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் கட்டத்தேர்வு நடைபெறும். மே 3ஆம் தேதிக்கு முன்பாக நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.