கொரோனா அபாயத்திற்குள்ளும் இந்தியாவிலிருந்து கடல்வழியாக வந்த கஞ்சா!

மன்னார் குதிரை மலை கடற்பகுதியூடாக கேரளா கஞ்சா பொதிகளை கடத்தி வந்த சந்தே நபர்கள் மூவரை சிலாவத்துறை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர். நேற்று மாலை மன்னார் நீதவான் நீதிமன்றில் இவர்களை ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
.
மன்னார் குதிரைமலைக் கடற்பரப்பினூடாக கண்ணாடி இழை படகு மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கொண்டு வரப்படுவதாக சிலாவத்துறை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை மற்றும் போதைவஸ்து தடுப்புப் பிரிவினர் ஆகியோருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன் போது விரைந்து செயற்பட்ட சிலாவத்துறை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 122 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா மற்றும் படகில் கடத்தலில் ஈடுபட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 சந்தேக நபர்களையும் கடலில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள், கண்ணாடி இழை படகு, மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பன் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சிலாபத்துறை பொலிஸார் கைது செய்யப்ட்ட நபர்களை வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.